இன்ஜினியரிடம் ரூ.80 லட்சம் மோசடி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தமிழ்நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு 39. இவர் பெங்களூருவில் தனியார் ஐ.டி., நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரிடம் பேஸ்புக் மூலம் சோழா செக்யூரிட்டீஸ் என்ற நிறுவனத்தினர் பணம் முதலீடு செய்ய கேட்டனர். தினமும் காலை 8:00 முதல் 9:00 மணி வரை அவர்கள் குறிப்பிடும் நிறுவனத்தில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய கூறுவர். அதில் அவருக்கு லாபம் கிடைத்தது. ஒரு கட்டத்தில் அவருக்கு ரூ.ஒரு கோடியே 30 லட்சம் வந்திருப்பதாகவும் அந்த தொகையை வங்கி கணக்கில் இருந்து எடுக்க 20 சதவீதம் பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறினர்.அதை நம்பி அவர்கள் கேட்ட தொகையை சுரேஷ்பாபு செலுத்தினார். ரூ.80 லட்சத்து 68 ஆயிரத்து 552 செலுத்திய பிறகு அந்த நிறுவனத்தினர் பணம் தராமல் ஏமாற்றி விட்டனர். சுரேஷ் பாபு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.