கூடங்குளம் அதிகாரி மகளிடம் 32 பவுன் நகை மோசடி *2 சமூக வலைத்தள நண்பர்கள் கைது
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரியின் மகளிடம் சமூக வலைத்தளம் மூலம் பழகிய நண்பர்கள் இருவர் 32 பவுன் நகைகளை வாங்கி ஏமாற்றினர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரி எத்திராஜ். இவரது குடும்பத்தினர் செட்டிகுளம் அணு விஜய் டவுன் குடியிருப்பில் வசிக்கின்றனர். அவரது 19 வயது மகள், கல்லூரியில் படித்து வருகிறார். அவரிடம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளம் மூலம் பழகிய நண்பர்கள் இருவர், அவசர தேவை இருப்பதாக கூறி பணம் கேட்டனர். அவர் பணம் இல்லாததால் வீட்டில் பீரோவில் பெற்றோர் வைத்திருந்த 32 பவுன் நகைகளை எடுத்து இரு தவணைகளாக அவர்களிடம் கொடுத்துள்ளார். இருவரும் நகைகளை திரும்ப தராததுடன் அதை பயன்படுத்தி சொகுசாக செலவழித்தனர்.பீரோவிலிருந்த நகைகளை காணாமல் அதிர்ச்சியடைந்த எத்திராஜ் கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நகைகளை மகள் நண்பர்களுக்கு கொடுத்தது தெரிய வந்தது. இதில் ஈடுபட்டதாக திருச்சி அப்துல் ரகுமான் 22, முகமது சாஹிப் 21, ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விற்பனை செய்யப்பட்ட நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.