மனைவி, மகனுக்கு ஜீவனாம்சம் மதுரை வாலிபருக்கு உத்தரவு
திருநெல்வேலி:'ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மோகமடைந்து, மனைவி, மகனை தவிக்க விட்ட மதுரை வாலிபர், இருவருக்கும் மாதம் 10,500 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்' என திருநெல்வேலி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை கப்பலுாரைச் சேர்ந்தவர் முரளி, 33, கார் நிறுவன மேலாளர். இவருக்கும் திருநெல்வேலியை சேர்ந்த நாகலட்சுமிக்கும், 2021 மே 21ல் மதுரை கள்ளிக்குடியில் திருமணம் நடந்தது. கடந்த 2022 மார்ச் மாதம் சைலேஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்குப் பிறகு, முரளி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கியதால் குடும்பப் பொறுப்புகளை கவனிக்கவில்லை. மனைவியின் நகைகளை அடகு வைத்து பணத்தை இழந்ததோடு, மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், நாகலட்சுமி திருநெல்வேலியில் மகனுடன் தனியாக வாழ்கிறார். இதற்கிடையே தனக்கும், குழந்தைக்கும் பராமரிப்புக்காக, மாதம் 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என திருநெல்வேலி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு அவர் தாக்கல் செய்தார். அதற்கு பதிலளித்த முரளி, 'பெற்றோரை நானே கவனித்து வருகிறேன். எனவே, அதிக தொகையை வழங்க இயலாது' என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அமிர்தவேலு நேற்று, ''முரளி தனது மனைவிக்கு மாதம் 7,500, மகனுக்கு 3,000 என மொத்தம் 10,500 ரூபாயை ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.