| ADDED : ஜூன் 15, 2024 09:27 PM
திருத்தணி:திருத்தணி ரயில் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதற்கும், வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்கும், மருத்துவமனை மற்றும் கல்வி கற்பதற்கும் சென்னை சென்டரல், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் மூலம் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்கின்றனர். பின் வேலை முடித்து இரவு, 7:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை சென்டரல் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து மின்சார ரயில்கள் மூலம் திருவள்ளூர், அரக்கோணம் வழியாக திருத்தணி ரயில் நிலையம் வந்தடைகின்றனர். இந்நிலையில் இரவு 8:15 மணிக்கு சென்ட்ரலில் இருந்து, திருத்தணி ரயில் நிலையத்திற்கு கடைசி மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இதை தவறிவிடும் பயணிகள், அதற்கு பின் இரவு, 9:00 மணி, 9:30 மணி மற்றும் இரவு, 10:20 மணி ஆகிய நேரத்தில் சென்டரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்களில் பயணிக்கின்றனர். இரவு நேரத்தில் அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நகருக்கு, 13 கி.மீ., துாரம் பயணிப்பதற்கு போதிய பஸ் வசதியில்லாததால் தங்களது வீடுகளுக்கு வந்து சேருவதில் சிரமப்படுகிறது. எனவே திருத்தணி பகுதி பயணியர் நலன்கருதி சென்னை கோட்ட ரயில்வே பொது மேலாளர், இரவு நேரத்தில் மட்டும் சென்டரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களையும் திருத்தணி ரயில் நிலையம் வரை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.