| ADDED : ஜூன் 14, 2024 01:27 AM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், மாக்மாம்பாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது முள்ளிபாளையம் கிராமம். இந்த கிராமத்தில் மொத்தம், 15 குடும்பத்தினர் மட்டுமே வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் அரசு அலுவலக கட்டடம் எதுவும் இல்லை. கடந்த நுாற்றாண்டில் கட்டப்பட்ட தொலைக்காட்சி அறை ஒன்று மட்டுமே அதற்கான பரிகாரமாக உள்ளது. அதுவும் இடிந்து விழும் நிலையில் கிடக்கிறது. அரசு பள்ளி, மற்றும் அங்கன்வாடி மையம் கூட இங்கு இல்லை. இந்த கிராமத்தை சேர்ந்த குழந்தைகள், அருகில் உள்ள முள்ளிபாளையம் கிராமத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்திற்கு தான் செல்ல வேண்டும். அதற்கும் முறையான சாலை வசதி கிடையாது. ஓடையில் இறங்கி கடக்க வேண்டிய நிலை உள்ளது. வளர்ச்சி திட்டங்களில் பின்தங்கியுள்ள இந்த கிராமத்தில் உள்ள ஒரே அரசு கட்டடமான தொலைக்காட்சி அறையும், சிதைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், தெருவில் நடமாடும் பகுதிவாசிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்த கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.