திருத்தணி:அரக்கோணம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருத்தணி சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் இரவு, பகலாக வினியோகம் செய்து வருவதாக, அ.தி.மு.க., - பா.ம.க., வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருத்தணி வருவாய் கோட்டாட்சியருமான தீபா தலைமையில், கூடுதலாக பறக்கும் படைகள் அமைத்து, சட்டசபை தொகுதி முழுதும் கண்காணித்து வருகின்றனர்.இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தீபா கூறியதாவது: திருத்தணி சட்டசபை தொகுதியில் மொத்தம், 330 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், ஆறு ஓட்டுச்சாவடிகளும், திருத்தணி ஒன்றியத்தில், பட்டாபிராமபுரம் ஓட்டுச்சாவடி என, 7 ஓட்டுச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.மேலும், இந்த ஓட்டுச்சாவடிகளில் மூன்று பேருக்கு மேல் ஒன்று சேரக்கூடாது என, தடைசட்டம் போடப்பட்டு உள்ளது. இதுதவிர, 330 ஓட்டுச்சாவடிகளில், 1,452 பேர் பணிபுரிவர்.வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதாக தொடர்ந்து புகார் வந்ததன் பேரில், கூடுதலாக, 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், 27 மண்டலஅலுவலர்களும் நேற்று முதல் இரவு பகலாக தொகுதி முழுதும் கண்காணித்து வருகின்றனர்.வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து தகுந்த ஆதாரத்துடன் புகார் கொடுத்தால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.