| ADDED : மே 25, 2024 01:03 AM
கும்மிடிப்பூண்டி:செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் தலைமையிலான போக்குவரத்து துறையினர் நேற்று பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்தனர். கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டி பகுதியில் நடந்த ஆய்வின் போது, வருவாய்த்துறை, போலீசார், கல்வித்துறை, போக்குவரத்து துறையினர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிகளின், 265 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, முதலுதவி பெட்டி, கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு கருவி, ஜி.பி.எஸ்., வாகன உறுதி தன்மை, உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்தனர்.ஆய்வின் முடிவில், 52 வாகனங்களில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதததால் அதன் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுகள் சரி செய்தபின் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆய்வின் போது, பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு, தீயணைப்பு துறையினர் சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு வழங்கிய அறிவுரையின் போது, மொபைல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் ஓட்டக்கூடாது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மீறினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.