உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பரிதாப நிலையில் ஏ.என்.குப்பம் அணைக்கட்டு

பரிதாப நிலையில் ஏ.என்.குப்பம் அணைக்கட்டு

கும்மிடிப்பூண்டி:ஒன்பது ஆண்டுகளுக்கு முன் வெள்ள பெருக்கின்போது சேதமடைந்த ஏ.என்.குப்பம் அணைக்கட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், தண்ணீர் கசிந்து சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கோடை காலத்தில், அதன் கீழ் உள்ள 20 ஏரிகளின் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.கவரைப்பேட்டை அருகே உள்ள ஏ.என்.குப்பம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே, 1969ல் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டில் இருந்து பிரியும் ஏரிக்கான நீர்வரத்து கால்வாய் வாயிலாக, அதன் கீழ் உள்ள கீழ்முதலம்பேடு, பன்பாக்கம், பரணம்பேடு, ஆவூர், சோம்பட்டு, அரசூர், காட்டாவூர், மெதுார் உள்ளிட்ட 20 ஏரிகள் நிரம்பி வருகின்றன.மழைக்காலத்தின் போது சேகரமாகும் தண்ணீர், ஆற்றில் தேக்கி வைத்து, கோடைக்காலத்தில் பாசனத்திற்கு திறந்து விடுவது வழக்கம். அதன்படி, இந்த 20 ஏரிகளின் பாசன நீரை நம்பி, 8,574 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.கடந்த 2015ல் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, அந்த அணைக்கட்டில் பதிக்கப்பட்டிருந்த பெரிய அளவு கான்கிரீட் சதுர கற்கள், பெயர்ந்து சேதமடைந்தன.அந்த சமயத்தில், அணைக்கட்டின் அடித்தளம் பலவீனமாகி, பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, தண்ணீர் கசிய துவங்கியது. தற்போது, அந்த விரிசல்கள் வழியாக அதிக அளவிலான தண்ணீர் கசிந்து வருகிறது.அந்த பழுதுகளை, இதுவரை நீர்வளத் துறையினர் சரிசெய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் போதிய மழை பெய்தும், மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாத அவல நிலையில் அணைக்கட்டு இருப்பதாக, விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.இதனால், கோடை காலத்தில் அணைக்கட்டின் பாசன நீரை நம்பியிருக்கும் விவசாயிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.கடந்த ஒன்பது ஆண்டுகளாக பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை சரிசெய்யப்படாமல் உள்ளன என, விவசாயிகள் புலம்புகின்றனர். உடனடியாக பழுதுகளை சரிசெய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏ.என்.குப்பம் அணைக்கட்டு புதுப்பிப்பு பணிகளுக்காக, 12.50 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பியுள்ளோம். தேர்தலுக்கு பின் ஒப்புதல் கிடைக்க பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.- நீர்வளத் துறை அதிகாரி,கும்மிடிப்பூண்டி.ஒன்பது ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி உள்ள ஏ.என்.குப்பம் அணைக்கட்டை, விவசாயிகள் நலன் கருதி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நிதி ஒதுக்கி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.மகேஷ்,விவசாயி, கீழ்முதலம்பேடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ