| ADDED : ஜூன் 02, 2024 12:25 AM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கம் ஊராட்சியில் பெரம்பூர் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தை சுற்றி லட்சிவாக்கம், பாலவாக்கம், சூளைமேனி, சென்னங்காரணி, தாராட்சி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வது. இப்பகுதி மக்களின் மருத்துவ தேவைக்காக 1986ம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது.இக்கட்டடம், 5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம், மகப்பேறு உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.இங்கு இரண்டு மருத்துவர்கள், 15க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு மருத்துவமனை கட்டடம், மருந்து கிடங்கு, ஆய்வகம், செவிலியர்கள் தங்கும் விடுதி ஆகியவை உள்ளன.தினமும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நோயாளிகளுக்கு சிறப்பாக மருத்துவம் செய்யப்படுகிறது என, கடந்தாண்டு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அரசு விருது வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த மருத்துவமனையை சுற்றி செடிகள் வளர்ந்துள்ளன. மேலும், நாய்கள் சுகாதார வளாகத்திற்குள் சுற்றித் திரிகின்றன. இரவு நேரங்களில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. இதனால், நோயாளிகள் இரவு நேரங்களில் இங்கு தங்க அச்சப்படுகின்றனர்.எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அசம்பாவிதம் ஏற்படும் முன் பெரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.