கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இம்மாதம், 7ம் தேதி துவங்கிய ஜமாபந்தி, நேற்று முன்தினம் முடிந்தது.ஜமாபந்தியில் மொத்தம், 757 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 106 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டன. எஞ்சிய, 651 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. நேற்று மாலை, கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில், தீர்வு காணப்பட்ட மனுக்கள் மீதான அரசு ஆணை வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் 106 பயனாளிகளுக்கு அரசு ஆணைகள் வழங்கப்பட்டன.திருத்தணி: திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் கடந்த, 7 ம் தேதி ஜமாபந்தி நிகழ்ச்சி துவங்கி, நேற்று வரை நடந்தது. இதில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா பங்கேற்றார்.பொதுமக்களிடம் இருந்து, வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித் தொகை, கணினி திருத்தம், பட்டா ரத்து, ஆக்கிரமிப்பு அகற்றம், உள்பட பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்க கோரி மொத்தம், 615 மனுக்கள் பெற்றார். இதில் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, 137 பயனாளிகளுக்கு நேற்று கோட்டாட்சியர் நலதிட்ட உதவிகள் வழங்கினார். மீதமுள்ள, 478 மனுக்கள் பரீசிலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டாட்சியர் தீபா, தாசில்தார் மதியழகன் மற்றும் துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நேற்று மாலை தாசில்தார் அலுவலகத்தில், 137 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணைகளும் கோட்டாட்சியர் தீபா வழங்கினார்.