பழவேற்காடு: பழவேற்காடு - காட்டுப்பள்ளி இடையே உள்ள, 13 கி.மீ., தொலைவிற்கான கிழக்கு கடற்கரை சாலையில் கோரைகுப்பம், காளஞ்சி, கருங்காலி உள்ளிட்ட, 15 மீனவ கிராமங்கள் உள்ளன.இதில், பழைய சாட்டன்குப்பம், கோரைகுப்பம், காளஞ்சி, கருங்காலி ஆகிய கிராமங்கள் கடற்கரைக்கு மிக அருகாமையில் அமைந்து உள்ளன.புயல், மழைக்காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும்போது, ராட்சத அலைகளால், கடற்கரை மணல் இந்த சாலையில் வந்து குவிகிறது.கடந்த இரு தினங்களாக கடல் அலை அதிகமாக இருப்பதால், காளஞ்சி - கருங்காலி இடையே உள்ள வளைவுப்பபகுதி சாலையில், அதிகளவில் கடற்கரை மணல் குவிந்து வருகிறது.இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த, 20 தினங்களுக்கு முன் இதேபோன்று சாலையில் கடற்கரை மண்ல் குவிந்து, ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டது.தற்போது மீண்டும் மேற்கண்ட இடத்தில், மணல் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர். கார், வேன் உள்ளிட்டவை அந்த சாலையில் பயணிப்பதை முற்றிலும் தவிர்த்து, வஞ்சிவாக்கம், மீஞ்சூர் வழியாக சென்று வருகின்றன.அடிக்கடி கடற்கரை மணல் சாலையில் குவிவதால், அத்திப்பட்டு புதுநகர், வல்லுார் பகுதியில் உள்ள அனல் மின்நிலையங்கள், காட்டுபள்ளியில் உள்ள துறைமுகங்கள், கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பணிக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழலில் பழவேற்காடு, வஞ்சிவாக்கம், மீஞ்சூர் வழியாக, 30 -40 கி.மீ., சுற்றி செல்லும் நிலை உள்ளது. இதனால் நேர விரயம், கூடுதல் எரிபொருள் செலவினங்கள் ஏற்படுகிறது.இந்த சாலை வழியாக தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், காட்டுப்பள்ளி, அத்திப்பட்டு, வல்லுார் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இருசக்கர வாகனங்களில் சென்று வருவதால், சாலையில் குவிந்துள்ள மணலை அவ்வப்போது அகற்றுவது தீர்வாகாது எனவும், மேற்கண்ட பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் எனவும் மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.