| ADDED : ஜூன் 02, 2024 12:22 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி -- ரெட்டம்பேடு சாலை சந்திப்பில் மளிகை கடை நடத்தி வருபவர் ராஜகோபால், 60. இவரது கடைக்கு அருகில், நவீன் என்பவர் குளிர்பான கடையும், குமார் என்பவர் மொபைல்போன் கடையும் நடத்தி வருகின்றனர்.கடந்த 30ம் தேதி இரவு, இந்த கடைகள் விற்பனை முடிந்து பூட்டப்பட்டன. நேற்று முன்தினம் காலை கடைக்கு வந்த உரிமையாளர்கள், கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதில், குளிர்பான கடையில், 8,000 ரூபாயும், மொபைபோன் கடையில் 10,000 ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள் மற்றும் 1,000 ரூபாயையும் திருடிச் சென்றனர். பின், அருகே உள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சியும் நடந்துள்ளது.ஒரே நேரத்தில் அடுத்தடுத்த மூன்று கடைகளின் பூட்டை உடைத்து நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். திருட்டு நடந்த கடைகளில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, திருடர்களை தேடி வருகின்றனர்.