சென்னை -- --திருப்பதி நெடுஞ்சாலையில் நிற்கும் வாகனங்களால் விபத்து அபாயம்
திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனம் என அனைத்து வாகனங்களும் சென்றவாறு இருக்கும். இந்நிலையில் திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் சில மாதங்களாக கனரக வாகனங்கள் மற்றும் டேங்கர் லாரிகள் ஒரு கி.மீ., துாரம், 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்று பல மணி நேரம் ஓய்வெடுக்கின்றன. தேசிய நெடுஞ்சாலை தற்போது இரு வழிப்பாதையாக உள்ளதால் மேற்கண்ட பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் டேங்கர் லாரி மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்துக்கள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. பொன்பாடி சோதனை சாவடியில் உள்ள போலீசாரும், நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் வாகனத்தில் வரும் போலீசாரும் நெடுஞ்சாலையோரம் நிற்கும் லாரிகளை விரட்டி அடிக்காமல், சைலண்டாக செயல்படுகின்றனர். இதனால், தொடர் விபத்துக்கள் அதிகரிக்கும் என்பதால் மாவட்ட எஸ்.பி., விரைந்து நடவடிக்கை எடுத்து, நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.