ழைநீர் வடிகாலில் இணைப்பு பணி... முடியவில்லை ! வெள்ள பகுதியை கண்காணிக்க உத்தரவு
சென்னை செ ன்னை மாநகராட்சியில், மழைநீர் வடிகால்வாய்களில், 45 இடங்களில் இணைப்பு பணிகள் முடியாததால், அக்., 15ம் தேதிக்குள் முடிக்க, மண்டல அலுவலர்களுக்கு, மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும், கடந்தாண்டு மழையில் வெள்ள பாதித்த, 180 இடங்களில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.வடகிழக்கு பருமழையையொட்டி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, மண்டல வாரியாக மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில், கோவளம், கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் விடுபட்ட இடங்களில் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் பணிகள்.மழைநீர் வடிகால் மற்றும் வண்டல் வடிகட்டி தொட்டிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல்கள் மற்றும் கழிவு அகற்றும் பணி, சாலை வெட்டு பணி, சேதமடைந்த சாலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.அத்துடன், கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய இடங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், மண்டலவாரியாக கேட்கப்பட்டது.மாநகராட்சி மேயர் பிரியா பேசியதாவது:தற்போது, 45 இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. 10 அல்லது 15 அடி நீளத்தில் தான் இணைப்பு வழங்க வேண்டும் என்பதால், அக்., 15ம் தேதிக்குள் இணைப்பு வழங்க வேண்டும்.கடந்த காலங்களில், 180 இடங்களில் மழைநீர் தேக்கம் இருந்தது. அந்த இடங்களில், மழைநீர் வடிகால் மற்றும் பாதிப்புக்கான காரணம் கண்டறிந்து தீர்வு காணப்பட்டுள்ளது.எனினும், அப்பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து, நிவாரண பணிகளில், 10,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.பொதுமக்கள், மழை தொடர்பான புகார்கள் தெரிவிக்க, '1913' என்ற தொலைபேசி எண்ணில், 150 கூடுதல் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.மேலும், 94455 51913 என்ற வாட்ஸாப் எண்ணிலும் புகார் மற்றும் தகவல்கள் அளிக்கலாம்.இவ்வாறு அவர் பேசினார்.180 இடங்கள் கண்காணிப்பு!கடந்த காலங்களில், 180 இடங்களில் மழைநீர் தேக்கம் இருந்தது. அந்த இடங்களில், மழைநீர் வடிகால் மற்றும் பாதிப்புக்கான காரணம் கண்டறிந்து தீர்வு காணப்பட்டுள்ளது. எனினும், அப்பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், முன்னெச்ரிக்கை பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மழைகால நிவாரண பணிகளில், ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு, பிரத்யேக 'டி-சர்ட்' வழங்கப்படும். 1919 என்ற புகார் எண்ணில் கூடுதலாக, 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.- ஜெ.குமரகுருபரன்,கமிஷனர், சென்னை மாநகராட்சி.
வெள்ள தடுப்பு: அமைச்சர் ஆலோசனை
சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பகுதிகளில், நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள பல சாலைகள், வடகிழக்கு பருவ மழை காலங்களில் பாதிக்கப்படுகின்றன.மிக்ஜாம் புயலின் போது பாதிக்கப்பட்ட சாலைகளில், நடப்பாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, வெள்ள பாதிப்பு வரைபடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.அதற்கேற்ப முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நேற்று நடந்தது.இதில், அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:வடகிழக்கு பருவ மழை விரைவில் துவங்கவுள்ளதால், சிறுபாலங்கள், வடிகால்வாய்கள், நீர்வழிப்பாதைகளில் தடையின்றி வெள்ளநீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, மறைமலை அடிகள் பாலம், இரும்புலியூர் - வண்டலுார் - முடிச்சூர் - வாலாஜா சாலைகளில் மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.சுரங்கப்பாதைகளுக்கு அருகே நீர் இறைக்கும் இயந்திரங்கள், எரிபொருள், ஜெனரேட்டர் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் பொக்லைன், லாரிகளையும் பயன்படுத்த வேண்டும். சாலை அரிப்பு ஏற்படும் இடங்களில் பயன்படுத்த, மணல் மூட்டைகள், சவுக்கு கம்புகளை தயார்படுத்த வேண்டும். அவசர காலங்களில் உதவக்கூடிய ஒப்பந்ததாரர்களின் தொடர்பு எண்கள், முகவரி உள்ளிட்ட விபரங்களையும் சேகரிக்க வேண்டும். சாலை சேத விபரங்களை உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.பேரிடர் காலங்களில் மருத்துவமனைகள், அவசர உதவி வழங்கும் நிறுவனங்களுக்கு செல்லும் சாலையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். தாம்பரம், சோமங்கலம், நந்தம்பாக்கம் சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.