திருத்தணி: ஆந்திரா- ---- தமிழக நுழைவாயிலான திருவள்ளூர் மாவட்டத்தில் ஆன்மிக தலங்கள் அதிகம் இருந்தாலும், பொழுது போக்கிற்கான சுற்றுலா இடங்கள் குறைவாகவே உள்ளன. ஆன்மிக தலத்தை பொறுத்தவரையில், திருவள்ளூர் வீரராகவர் கோவில், திருத்தணி முருகன் மலை கோவில், சிறுவாபுரி முருகன் கோவில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்.திருமழிசை ஜெகநாதபெருமாள் கோவில், ஒத்தாண்டேஸ்வரர் கோவில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை அருகேயுள்ள ஆந்திரமாநிலம் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் உள்ளிட்ட ஆன்மிக தலங்கள் உள்ளன. இதுதவிர பூண்டி, புழல், தேர்வாய் கண்டிகை, சோழவரம், பழவேற்காடு ஏரிகள் உள்ளன. பழவேற்காடில் பறவைகள் சரணாலயமும் உள்ளது. பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வாட்டுவதால், ஏரிகள், நீர்நிலைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லை. இதனால் பெரும்பாலான மக்கள், அதிக தண்ணீர் உள்ள நீர்நிலைகள், ஆண்டு முழுதும் தண்ணீர் கொட்டும் அருவிகளை தேடி செல்கின்றனர். மேலும் ஆன்மிக தலமான திருத்தணி முருகன் மலைகோவிலுக்கும் படையெடுக்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான கோவில்கள் காலை, 6:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரையும், மாலையில், 4:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் திருத்தணி முருகன் கோவில் காலை, 6:00 மணி முதல் இரவு, 8:45 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இதே போல், திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவில்களான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், மத்துார் மகிஷா சுர மர்த்தினி அம்மன் கோவில், பெரியநாகபூண்டி நாகேஸ்வரர் கோவில்.திருத்தணி சுந்தர விநாயகர் கோவில் ஆகிய கோவில்களும் காலை, 6:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை கோவில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.திருத்தணி முருகன் கோவில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மலைமேல் உள்ள கோவில் கல்கட்டடம் என்பதால், வெப்பம் தெரியாமல் குளிர்ச்சியாக இருப்பதாலும், மலை மீது காற்று வீசுவதாலும் தற்போதைய வெயிலுக்கு உகந்த இடமாக கருதி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு செல்கின்றனர்.இங்கு காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. காலையில் செல்லும் பக்தர்கள் மதியம் 12:00 மணிக்குள் கீழ் இறங்குகின்றனர். 11:00 மணிக்கு மேல் செல்லும் பக்தர்கள் மாலை வரை அங்கே இருந்து பொழுதை கழித்து மாலை 4:00 மணிக்கு மேல் கீழ் இறங்குகின்றனர். மாலை 5:00 மணிக்கு மேல் செல்லும் பக்தர்கள் இரவு 8 :00 மணி வரை கீழ் இறங்குகின்றனர். நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மற்றும் தீமிதி விழாவில் காப்பு கட்டிய பக்தர்கள் என வழக்கத்திற்கு மாறாக முருகன் மலைக் கோவிலில் காலை, 6:00 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். கொளுத்தும் வெயிலிலும், மலைக்கோவில் தேர் வீதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்ததால் பொதுவழியில், இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிப்பட்டனர்.முன்னதாக அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் தங்கத்தேரில் தேர்வீதியில் உலா வந்து அருள்பாலித்தார். திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கொளுத்தும் வெயிலால் பக்தர்கள் நலன்கருதி தேர்வீதியில் தரைவிரிப்பு அமைத்து அடிக்கடி தண்ணீர் தெளிக்கப்பட்டது.இதுதவிர தேர்வீதிக்கு வரும் பக்தர்களுக்கு நீர்மோர், வெள்ளப்பானகம், கேசரி, வெண்பொங்கல், கற்கண்டு சாதம், சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் மற்றும் புளியோதரை என காலை, 6:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை பிரசாதமாக வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேர்வீதி முழுதும் நான்கு பக்கங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்படுகிறது.