உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆடு, மாடு திருடும் கும்பலால் விவசாயிகள் பீதி புகார் அளித்தும் குறட்டை விடும் போலீசார்

ஆடு, மாடு திருடும் கும்பலால் விவசாயிகள் பீதி புகார் அளித்தும் குறட்டை விடும் போலீசார்

திருவாலங்காடு ஒன்றிய பகுதிகளில் ஆடு, மாடுகளை திருடும் கும்பலால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். போலீசார் இரவு நேர ரோந்தில் ஈடுப்பட்டு, திருட்டு கும்பலை கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரியகளக்காட்டூர், சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், சக்கரமநல்லுார், கணேசபுரம், பழையனுார் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அப்பகுதிவாசிகள், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர்.மேற்கண்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவில் கால்நடைகள் திருட்டு அதிகரித்து உள்ளது. இரவில் டாடா ஏஸ் வாகனத்தில் வரும் கால்நடை திருடும் கும்பல் இதுவரை 30க்கும் மேற்பட்ட மாடுகளையும், 50க்கும் மேற்பட்ட ஆடுகளையும் திருடி சென்றுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர். தொடர் திருட்டு நடப்பதால் காவல் துறை குறட்டை விடுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து சின்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கால்நடை வளர்க்கும் பெண் ஒருவர் கூறியதாவது: நான் கணவர் துணையின்றி மகள், மகனுடன் வசிக்கிறேன். பசுக்களை வளர்த்து பால் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். ஓராண்டுக்கு முன் ஓடை பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற என்னுடைய இரண்டு பசுக்களை டாடா ஏஸ் வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தேன். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதன்பின் தொழுதாவூர் கிராமத்தில் இரவு, 1:00 மணிக்கு வாகனத்தில் வந்த நபர்கள் வீட்டில் கட்டி வைத்திருந்த பசுவை திருடி சென்றனர். பழையனுார் கிராமத்தில் மூதாட்டியிடம் போலி 2,000 ஆயிரம் ரூபாய் கொடுத்து மூன்று ஆடுகளை பட்டப்பகலில் திருடி சென்றனர். கணேசபுரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பெரியகளக்காட்டூர் கால்நடை வளர்ப்போர் கூறியதாவது: வாழ்வாதாரமாக உள்ள கால்நடைகள் திருடப்படுவது வேதனையளிக்கிறது. திருடர்கள் நள்ளிரவு 12:00 மணி முதல் 3:00 மணிக்குள்ளாக வாகனத்தில் வருகின்றனர். திருடப்படும் கால்நடைகளை பெரியகளக்காட்டூர், -- ஒரத்துார் சாலை வழியாக வாகனத்தில் கடத்தி செல்கின்றனர். இதுசம்பந்தமாக கேமரா பதிவும் உள்ளது. திருவாலங்காடு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டும் இதுவரைஎவ்வித நடவடிக்கையும் இல்லை. போலீசார் மெத்தனமாக செயல்படுகின்றனர். காவலர்கள் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டால் மட்டுமே இதுபோன்ற திருட்டை தடுக்க முடியும். ஒருவாரத்தில் திருடப்பட்ட கால்நடைகளின் மதிப்பு 5 லட்சம் ரூபாய். சமீபத்தில் 5 மாடுகளும், 3 ஆடுகளும் திருடு போய் உள்ளது.தற்போது தேர்தல் பணியில் போலீசார் ஈடுபடுவதை தொடர்ந்து திருடர்கள் திருட்டை அதிகரித்துள்ளனர். இதை உடனடியாக தடுக்கவும், திருடர்களை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் திருவள்ளூர் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி