| ADDED : ஆக 21, 2024 09:09 PM
திருவள்ளூர்:திருவள்ளுர் மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குனர் எஸ்.ஸ்ரீதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மத்திய அரசின் தேசிய உயிர்ம வேளாண்மை செயல்திட்ட வழிமுறைகளின்படி திருவள்ளுர் மாவட்டத்தில் உயிர்மச்சான்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள், தனிநபராகவோ, குழுவாகவோ, வணிக நிறுவனமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். உயிர்ம விளைபொருட்களை பதன் செய்வோரும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம்.தனிநபர் சிறு, குறு விவசாயிகளுக்கு 2,700, தனிநபர் பிற விவசாயிகளுக்கு 3,200, குழுவாக பதிவு செய்தால் 7,200 மற்றும் வணிக நிறுவனமாக பதிவு செய்தால் 9,400 ரூபாய் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.உயிர்மச்சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள், விண்ணப்பப் படிவம், நிரந்தர கணக்கு எண் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பண்ணையின் பொது விவர குறிப்பு, பண்ணையின் வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை விவரங்கள், ஆண்டு பயிர் திட்டம், துறையுடனான ஒப்பந்தம், சிட்டா நகல் ஆகியவற்றை மூன்று நகல்களிலும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டுடன் சமர்ப்பிக்க வேண்டும்.மேற்காணும் விண்ணப்பப் படிவங்களை www.tnocd.net என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு திருவள்ளுர், பெரியகுப்பம், லால் பகதுார் சாஸ்திரி தெருவில் உள்ள விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.