உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அர்ஜன்ட், ஆடினரி வசூலில் கலக்கும் நான்கு சார்-பதிவாளர் அலுவலகங்கள்

அர்ஜன்ட், ஆடினரி வசூலில் கலக்கும் நான்கு சார்-பதிவாளர் அலுவலகங்கள்

அம்பத்துார்: செங்குன்றம், மாதவரம், அம்பத்துார், கொன்னுார், சார் - பதிவாளர் அலுவலகங்களில், அம்பத்துார், கொரட்டூர், முகப்பேர், வில்லிவாக்கம், கொளத்துார், செங்குன்றம், சோழவரம், மாதவரம், புழல் சுற்றுவட்டாரங்களுக்கான, பத்திரப்பதிவு தொடர்பான பல்வேறு பணிகள் நடக்கின்றன.இங்கு, தினமும் தலா, 100க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவுகள் செய்யப்படுகின்றன. முகூர்த்த நாள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில், அவை 150 வரை அதிகரிக்கின்றன.சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள அலுவலகங்களில், நுகர்வோர் உரிய ஆவணங்களுடன் சென்றாலும், இங்கு பணிகள் நடப்பதில்லை என புகார்கள் எழுந்துள்ளன.இங்குள்ள இடைத்தரகர்கள் வாயிலாக சென்று, அரசு கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக, அவர்கள் குறிப்பிடும் தொகையை கொடுத்தால் மட்டுமே பணிகள் முடிகின்றன என்ற குற்றச்சாட்டும் வலுத்துள்ளது. வில்லங்க சான்று, ஆவண நகல், பத்திரப்பதிவு, களப்பணி என அனைத்திற்கும், 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்து, அரசு நிர்ணயித்த கட்டணம் செலுத்தினாலும், சர்வர் தாமதம், 'லாகின் ஐ.டி., மூவ்' போன்ற, கணினி செயல்பாடுகளை காரணம் காட்டி, கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது.நுகர்வோரும் வேறு வழியின்றி, காலதாமதத்தை தவிர்ப்பதற்காக, தங்கள் பணியை முடிக்க, கூடுதல் பணத்தை 'தண்டம்' அழுகின்றனர்.இந்த சார் - பதிவாளர் அலுவலகங்களில் வில்லங்க சான்றுக்கு, அரசு நிர்ணய கட்டணத்தை காட்டிலும், கூடுதலாக 900 - 1,200 ரூபாய் வரையும், ஆவண நகலுக்கு, 1,500 - 2,000 வரையும் கொடுக்க வேண்டும்.கூடுதல் பணம் கொடுப்போரின் பணிகள் மட்டுமே குறித்த நாளில் முடியும். இல்லாவிட்டால், பல நாட்களுக்கு அலைந்து திரிய வேண்டும்.அதற்காக தான், 'அர்ஜன்ட், ஆடினரி' ரூட் எடுத்து, இடைத்தரகர்கள் பணத்தை வசூலிக்கின்றனர். மேலும், வீட்டுமனையாக பிரிக்கப்படும் விவசாய நிலம், வீடு விற்பனை கள ஆய்வுக்கு தனி கட்டணம் கொடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் களப்பணி காலதாமதமாகும். அப்படி கொடுத்தால், இடத்தின் மதிப்பை கூட்டியோ, குறைத்தோ 'அட்ஜெஸ்ட்' செய்ய முடியும். சராசரியாக, சிறிய இடத்திற்கான பத்திரப்பதிவுக்கு, 1,500 ரூபாய் முதல், ஏரி, குளம் போன்ற அரசு நிலம் மற்றும் ஒருவர் நிலத்தை, 'போலி' ஆவணம், ஆள்மாறாட்டம் மூலம், மற்றவருக்கு விற்கும் பத்திரப்பதிவிற்கு, 2 லட்சம் ரூபாய் வரை, அங்குள்ள அதிகாரிகள் வசூலிப்பதால் தான், நிலம் அபகரிப்பு புகார் மற்றும் வழக்குகள் அதிகரிக்கின்றன.அதனால், சட்டம்- - ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது. கட்டாய வசூல் வேட்டையை தடுக்கத்தான், அரசு 'ஆன்லைன்' முறை கொண்டு வந்தது.ஆனாலும், முன்பை விட தற்போது, நிலத்தின் மதிப்பு அதிகரித்த காரணத்தால், அதிகாரிகளின் தேவையும் அதிகரித்து, பத்திரப்பதிவு அலுவலகங்களில், நுாதனமாக கூடுதல் பணம் வசூலிப்பும் அதிகரித்துள்ளது.எனவே, இந்த நான்கு அலுவலகங்களிலும், சார் - பதிவாளராக பணியாற்ற, பலத்த போட்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எப்படி போகிறது?

கூடுதலாக வசூலிக்கப்படும் பணம் அலுவலகத்தில் வைக்கப்படுவதில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திடீர் நடவடிக்கையில், அதிகாரிகள் சிக்காமல் இருக்க, தங்களுக்கு நம்பிக்கையான இடைத்தரகர், ஆவண எழுத்தர் அல்லது கார், ஆட்டோ ஓட்டுனர்களிடம் பாதுகாக்கப்படுகிறது. மாலை பணி முடிந்து அதிகாரி வீட்டிற்கு செல்லும் வழியில், அதாவது அலுவலகத்தில் இருந்து, 2 அல்லது 3 கி.மீ., துாரத்திற்கு பின், அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்காக, சம்பந்தப்பட்ட நபருக்கு தனி 'கவனிப்பு' செய்யப்படுகிறது.

முதியோர் அவதி

பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிக்காக, இந்த அலுவலகங்களுக்கு வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அவர்கள் அலுவலகத்திற்குள் வந்து, செல்ல போதிய கட்டமைப்பு வசதி இல்லை. மேலும், 'சர்வர்' செயல்படவில்லை என, நீண்ட நேரம் காக்க வைப்பது போன்ற பிரச்னைகளால், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதற்கு காரணம், இங்குள்ள அதிகாரிகள், இடைத்தரகர்களுக்கு முன்னுரிமை அளித்து, பெரிய தொகைக்கான பத்திரப்பதிவுகளில் கவனம் செலுத்துவது தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ