| ADDED : ஜூன் 02, 2024 12:42 AM
திருத்தணி:சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் மதியழகன், 21. இவர், ஆந்திர மாநிலம் திருப்பதி அம்பேத்கர் சட்டக் கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் தேர்வு கட்டணம் கட்டுவதற்காக, தாம்பரத்திலிருந்து திருப்பதிக்கு தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.சென்னை-- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அருகே சென்ற போது, சாலையில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டு வாகனத்தில் ஏறினார். சிறிது துாரம் சென்றவுடன் லிப்ட் கேட்ட வாலிபர் இறங்கினார்.இதையடுத்து, சிறிது துாரம் சென்ற பின் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப, பர்சை தேடிய போது காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பர்சில், தேர்வு கட்டணம் கட்டுவதற்காக வைத்திருந்த, 10,000 ரூபாயும் திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்து திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து, திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ், 24, என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே, திருத்தணி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.