| ADDED : ஜூலை 23, 2024 01:00 AM
பாண்டூர், பூண்டி ஒன்றியம் பட்டரைபெரும்புதுார் ஊராட்சிக்கு உட்பட்டது வரதாபுரம்கிராமம். இங்கு திருவள்ளூர் - - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அரசு துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள பள்ளி என்பதால் மாணவர்களின் பாதுகாப்பை கருதி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 200 மீட்டருக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இந்த சுவர் பள்ளியை சுற்றி அமைக்காமல் ஒருபக்கம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாகவும், பள்ளிக்குள் நாய், பன்றி உள்ளே நுழைந்து விடுகிறது. சுற்றுச்சுவர் அமைத்தும் பயனில்லை, இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது என, பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பள்ளிக்கு முழுதும் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.