திருவான்மியூர்:திருவான்மியூர், அவ்வை நகரைச் சேர்ந்தவர் கவுதம், 27; வழக்கறிஞர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பணி புரிந்தார். நேற்று முன்தினம் இரவு, திருவான்மியூர், திருவள்ளுவர் சாலையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது, மூன்று பேர் கும்பல் கவுதமை சரமாரியாக வெட்டினர். நண்பர்கள், அவரை அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று அதிகாலை உயிரிழந்தார்.இது குறித்து விசாரித்த திருவான்மியூர் போலீசார், கொலையாளிகளான கண்ணகி நகரைச் சேர்ந்த கமலேஷ், 27, பார்த்திபன், 31, நித்தியானந்த், 27, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.வழக்கு குறித்து போலீசார் கூறியதாவது:வழக்கறிஞர் கவுதம், கமலேஷ், பாலவாக்கத்தைச் சேர்ந்த மதன்ராஜ் ஆகியோர் நண்பர்கள். கமலேஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்தாண்டு, மதன்ராஜ் போதையில் கமலேஷின் உறவினர் பிரபுவைதாக்கியுள்ளார்.இதனால், மதன்ராஜ், கமலேஷ் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது. தொடர்ந்து, கமலேஷ் நண்பர்களுடன் சேர்ந்து மதன்ராஜை தாக்கினார்.இது குறித்து விசாரித்த நீலாங்கரை போலீசார், கமலேஷ் மற்றும் நண்பர்களை கைது செய்தனர். ஜாமினில் வெளிவந்த கமலேஷிடம், 'ஏன் மதன்ராஜை தாக்கினாய்' என, வழக்கறிஞர் கவுதம் கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் கவுதம், தனக்கு எதிராக செயல்படுவதாக நினைத்து அவரை கமலேஷ் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். கொலையில் வேறு எதாவது காரணம் இருக்குமா என, தீவிரமாக விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.