| ADDED : ஜூலை 30, 2024 07:01 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டுகளில், பாதாள சாக்கடை திட்டம் வாயிலாக கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. சேகரமாகும் கழிவுநீர், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஓ., காலனி, தேவி மீனாட்சி நகர் அருகில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுத்திகரிக்கப்பட்ட பின் புட்லுார் ஏரியில் கலக்கிறது.தற்போது, சுத்திகரிப்பு மையத்தைச் சுற்றிலும் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் குளம்போல் தேங்கி உள்ளது. கடந்தாண்டு பெய்த பருவமழையால், ஏற்கனவே நிரம்பி வழியும் புட்லுார் ஏரியில், தற்போது கழிவுநீர் கலந்து வருகிறது.இதனால், ஏரி நீர் மாசடைந்து வருவதுடன், ஏரியில் உள்ள மீன்கள், கழிவுநீரால் செத்து மிதக்கின்றன.இதுகுறித்து புட்லுாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில்குமார் கூறியதாவது:நகராட்சி கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல், அப்படியே புட்லுார் ஏரியில் விடுகின்றனர். இதனால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது. இதுகுறித்து, பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அளித்தும், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கழிவுநீரால், ஏரியில் உள்ள மீன்கள் செத்து மடிந்து, துர்நாற்றம் வீசுகிறது. எனவே, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.