| ADDED : ஜூலை 22, 2024 06:00 AM
பொன்னேரி: பொன்னேரி அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில் இருந்து வேலுார் கிராமத்திற்கு செல்லும் ஒன்றிய சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.சாலை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டு, அதில் மழைநீர் தேங்கி உள்ளது. பல்லாங்குழிகளாக மாறி உள்ள சாலையில் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.வேலுார் , தமிழ்காலனி, கடமஞ்சேரி, நாகச்சேரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு பொன்னேரி செல்ல இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.பேருந்து வசதி இல்லாத நிலையில், பெரும்பாலானவர்கள் இருசக்கர வாகனங்களையே நம்பி உள்ளனர். சாலை பராமரிப்பு இன்றி கிடப்பதால், கிராமவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்டவை இந்த சாலை வழியாக வருவதற்கு தயக்கம் காட்டுகின்றன. இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு பொன்னேரி செல்ல, கார், வேன் உள்ளிட்டவைகள் செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மாற்று வழித்தடங்களில், 10-15 கி.மீ., சுற்றிக்கொண்டு பயணிக்கும் நிலை ஏற்படுகிறது.கிராம வாசிகளின் சிரமம் கருதி, மேற்கண்ட சாலையை புதுப்பிக்க ஒன்றிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.