வடசென்னை அனல் மின்நிலைய தொழிலாளர்கள் போராட்டம்
மீஞ்சூர், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில், வடசென்னை அனல் மின்நிலையம் உள்ளது. இங்கு, ஐந்து அலகுகளில், 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.பல்வேறு நிலைகளில், இங்கு, 1,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:கடந்த, 10ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. 2021, சட்டசபை தேர்தலின்போது ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தம் செய்யப்படுவர் என தி.மு.க.,தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக, 30,000 ரூபாய் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்யும்வரை, ஒப்பந்ததாரர்கள் வாயிலாக ஊதியம் வழங்காமல், மின்வாரியமே நேரிடையாக வழங்க வேண்டும். அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.