| ADDED : ஜூலை 18, 2024 01:10 AM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சேதுவராகபுரம் கிராமத்திற்கு, சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் இருந்து தார்ச்சாலை வசதி உள்ளது. இந்த மார்க்கத்தில், இதுவரை பேருந்து வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், சேதுவராகபுரம், பந்திகுப்பம் பகுதிவாசிகள் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்று வருகின்றனர். இந்த கிராமங்களை சேர்ந்த கல்லுாரி மாணவியர், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் உள்ள அரசு கலை கல்லுாரியில் படிக்கின்றனர். இக்கிராமத்தில் இருந்து சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், பில்லாஞ்சி வரை சைக்கிளில் பயணிக்கின்றனர். அங்கிருந்து பேருந்து வாயிலாக பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், பந்திகுப்பம் சாலை நீண்ட காலமாக பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்த மழையால், சாலையில் ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.இதனால், சைக்கிளில் பயணிக்கும் மாணவியர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, மாணவியர் மற்றும் பகுதிவாசிகளின் நலன் கருதி, இச்சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.