பைக் வெடித்த விபத்து மேலும் ஒருவர் பலி
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 32. இவருக்கு மஞ்சுளா, 31 என்ற மனைவியும், மிதுலன் 2, நவிலன் 1 என்ற 2 ஆண் குழந்தைகள் இருந்தனர்.பிரேம்குமார் குடும்பத்துடன் திருத்தணி டவுன் முருகப்பா நகர் பகுதியில் மகேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் முதல் தளத்தில் வாடகைக்கு வசித்து வந்தார். கடந்த 6ம் தேதி வீட்டின் தரை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க்குகள் வெடித்து சிதறியதில் தீ வீடு முழுதும் பரவ துவங்கியது. இதைக்கண்ட பிரேம்குமார் - மஞ்சுளா தம்பதி தனது 2 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு மேல்தளத்தில் இருந்து படிகள் வழியாக வீட்டை விட்டு வெளியேற முயன்றனர். படியில் இறங்கியபோது வீடு முழுதும் கரும்புகை சூழ்ந்து இருந்ததால் தீயில் சிக்கினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு நவிலன் உயிரிழந்தார். தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் மிதுலனும், மஞ்சுளாவும் உயிரிழந்தனர். இந் நிலையில் நேற்று பிரேம்குமார் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் மஞ்சுளாவின் சகோதரர், இந்த விபத்தில் சந்தேகம் உள்ளதாக, போலீசாரிடம் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கை இல்லை.