| ADDED : ஜூலை 31, 2024 10:25 PM
ஊத்துக்கோட்டை:தமிழக -- ஆந்திர எல்லையில் அமைந்துள்ளத, ஊத்துக்கோட்டை பேரூராட்சி. இங்கு, 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இங்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. மேலும், சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், அத்தியாவசிய தேவைக்கு ஊத்துக்கோட்டை வந்து செல்கின்றனர்.ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தோர், கலெக்டர், எஸ்.பி., வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களுக்கு செல்வதற்காக, அரசு பேருந்துகளையே நம்பி உள்ளனர்.மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கு மாநகர பேருந்து இயக்கப்படும் நிலையில், ஊத்துக்கோட்டை -- திருவள்ளூர் இடையே மட்டும் இயக்கவில்லை.இதுகுறித்து, பலமுறை அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து மற்றும் திருவள்ளூர் பணிமனையில் இருந்து ஒரேயொரு பேருந்து மட்டும் இயக்கப்படுகிறது.பேருந்து பற்றாக்குறையால், தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் செல்லும் செல்லும் அவலநிலை உள்ளது. அதிக வருவாய் உள்ள ஊத்துக்கோட்டை -- திருவள்ளூர் இடையே, ஒரேயொரு அரசு பேருந்து மட்டும் இயக்கும் அதிகாரிகளின் 'கணக்கு' புரியவில்லை.எனவே, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் வழித்தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 30 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.