| ADDED : ஜூன் 13, 2024 04:58 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் அரசு பேருந்து பணிமனை உள்ளது. விழுப்புரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் இந்த பணிமனையில் இருந்து சென்னை கோயம்பேடு, செங்குன்றம், காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ஆந்திர மாநிலம், புத்துார், திருப்பதி, நெல்லுார், சத்தியவேடு, காளஹஸ்தி உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த பணிமனையில், 154 ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணியாற்றுகின்றனர். வெளியூர்களில் இருந்து பணிக்கு வரும் ஊழியர்கள் பணி முடிந்து இரவு நேரங்களில் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் பணிமனையில் உள்ள ஓய்வு அறையில் தங்குகின்றனர். போதுமான அளவு காற்று வசதி இல்லாததால், இவர்கள் சரியாக உறங்குவதில்லை.மறுநாள் இவர்கள் பணியாற்றுவதற்கு சிரமமாக இருந்தது. இதைத் தொடர்ந்து அரசு பேருந்து பணிமனைகளில் உள்ள ஓய்வறைகளுக்கு குளிர்சாதன வசதி செய்து கொடுக்க அரசு முடிவெடுத்தது. இதன் தொடர்ச்சியாக ஊத்துக்கோட்டை அரசு பணிமனையின் ஓய்வறையை 3 லட்சம் மதிப்பில் சீரமைப்து மூன்று குளிர்சாதன கருவிகள் அமைக்கப்பட்டன.இதன் துவக்க விழா கிளை மேலாளர் அரிபாபு தலைமையில் நேற்று நடந்தது. கும்மிடிப்பூண்டி தி.மு.க., எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜன் குளர்சாதன வசதி அறையை துவக்கி வைத்தார். இதில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.