| ADDED : ஜூன் 20, 2024 12:47 AM
பொன்னேரி:பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில், கடந்த 7ம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. நேற்று மீஞ்சூர் ஒன்றியம் கூடுவாஞ்சேரி ஊராட்சி தலைவர் பிரியா, அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, ஏரியில் கழிவுநீர் கலப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, ஜமாமந்தி அதிகாரியான சப் - கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்திடம் மனு அளித்தார்.மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:கூடுவாஞ்சேரி கிராமத்தில், அரசுக்கு சொந்தமான மந்தைவெளி பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமித்துவைத்து உள்ளனர். இதனால் ஊராட்சியில் தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. ஆக்கிரமிப்பகளை அகற்றக்கோரி, 4 ஆண்டுகளாக ஜமாபந்தியில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.பரிக்குப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட சின்னகாவணம் பகுதியில் இருந்து கழிவுநீர் கொண்டு வந்து விடப்படுகிறது.கழிவுநீர் வந்து குவியும் ஏரிப்பகுதியில் இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது ஏரியில் கழிவுநீர் கலப்பதால், ஆழ்துளை கிணறுகளில் இருந்து கிடைக்கும் குடிநீர் மாசடைந்து உள்ளது. வருவாய் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஏரியில், கழிவுநீர் கலப்பதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.