பொன்னேரி, பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்களை ஆவடி கமிஷனரகத்துடன் இணைத்தும் போதிய காவலர்கள் நியமிக்கப்படாதததால், குற்றச் சம்பவங்களால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்கள், கடந்த, பிப்ரவரி, 1ம் தேதி முதல் ஆவடி கமிஷனரகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.பொன்னேரி காவல் நிலையதிற்கு, 8 கி.மீ., சுற்றளவில், 44 தாய்கிராமங்கள், 22சிறு கிராமங்கள், பொன்னேரி நகரம் ஆகியவற்றில், 80,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். நலத்துறை
பொன்னேரி நகரம் தாலுகா தலைமையமாக இருக்கிறது. இங்கு வட்டாட்சியர், சப் - கலெக்டர், மாவட்ட மீன்வளத்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.பல்வேறு பிரச்சனைகளுக்காக ஏதாவது ஒரு அமைப்பின் சார்பில் இங்கு தினமும் நடைபெறும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அவசியமாகிறது.இதுதவிர, காட்டன் சூதாட்டம், சட்டவிரோத லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனை, அதிகாலை மதுவிற்பனை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணித்தல், திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க இரவுநேர ரோந்துபணி மேற்கொள்ளுதல் என பல்வேறு பணிகள் உள்ளன.அதேபோன்று, திருப்பாலைவனம் காவல் நிலைய எல்லை, 15 கி.மீ., சுற்றளவில், 35 மீனவ கிராமங்கள் உட்பட, 60க்கும் அதிகமான கிராமங்களில், ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் உள்ளனர்.மீனவர்களுக்கு ஏரியில் மீன்பிடித் தொழில் செய்வது தொடர்பாக அவ்வப்போது ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள், தடையை மீறி நடைபெறும் படகுசவாரி, படகுகளில் ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தல், வெளிமாநில மதுபானங்கள் விற்பனை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் ஆகியவற்றை போலீசார் கண்காணிக்க வேண்டும். குற்ற சம்பவங்கள்
இரண்டு காவல் நிலையங்களிலும் போதிய போலீசார் இல்லாததால், மேற்கண்ட குற்றச் சம்பவங்களை கண்காணிக்க முடியாமல் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. இதனால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர், நிம்மதியாக உள்ளனர். இரண்டு காவல் நிலையங்களும், ஆவடி கமிஷனரகத்துடன் இணைந்த பின், இங்கு அதிகளவில் போலீசார் பணியமர்த்தப்படுவர். குற்றச் சம்பவங்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பழைய நிலையே தொடர்வதால் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.காவல் நிலையங்களுக்கு என நிரந்தர போலீசார் பணியமர்த்தப்படவில்லை. ஆவடி கமிஷனரகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ள, போலீசார், நிலையத்திற்கு இருவர் என இங்கு, ஒருவாரம் பணிபுரிகின்றனர்.கடந்த ஆறு மாதங்களாக இதே நிலை தொடர்வதால், குற்ற வழக்குகள் தொடர் விசாரணை இன்றி கிடப்பில் போடப்பட்டு உள்ளன.சட்டவிரோத செயல்கள் தடையின்றி நடைபெறுகிறது. திருட்டு, வழிப்பறிச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் ஈடுபடுவோரைப் பிடிக்க, குற்றப்பிரிவு குழு எதுவும் இல்லை. இது குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்களில் பணிக்கு வரும் தற்காலிக போலீசார், ஒருவாரம் தானே இங்கு பணி. எதற்கு தேவையின்றி ரிஸ்க் எடுப்பது என பொறுப்பை தட்டிக்கழிக்கின்றனர். தவிப்பு
புதிதாக வருபவர்கள், காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பகுதிகளை தெரிந்து கொள்வதற்குள், அவர்கள் 'டூட்டி' முடிந்து, அடுத்த குழு வந்து விடுகிறது. நிலைய அதிகாரிகளும், இவர்களை வேலை வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.சென்னை சிட்டி போலீசுடன் காவல் நிலையங்கள் இணைவதால், அதிக பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பியிருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.கண்துடைப்பிற்காக காவல் நிலையங்களை ஆவடியுடன் இணைத்து விட்டு, உரிய போலீசாரை பணியமர்த்தாமல் உள்ளனர். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.