உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிமென்ட் சாலைகளுக்கு இருபுறமும் மண் நிரப்பாததால் குடியிருப்புவாசிகள் தவிப்பு

சிமென்ட் சாலைகளுக்கு இருபுறமும் மண் நிரப்பாததால் குடியிருப்புவாசிகள் தவிப்பு

மீஞ்சூர்: மீஞ்சூர் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில், சாலைகள் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இதில், குடியிருப்பு பகுதிகளில் சிமென்ட் சாலைகள் அமைக்கும்போது, அதன் அகலத்திற்கு அமைக்காமல் இருபுறமும், 2 - 3 அடி இடைவெளி விட்டு அமைக்கின்றனர்.இதனால், குடியிருப்புகளுக்கும், புதிதாக அமைக்கப்படும் சாலைகளுக்கும் இடையே உள்ள பகுதி தாழ்வாக உள்ளது. இது குடியிருப்புவாசிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.மேலும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வீட்டில் இருந்து தெருவிற்கு கொண்டு வருவதற்கும், வீட்டிற்குள் கொண்டு செல்வதற்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.சிமென்ட் சாலைகள் அமைக்கும்போது, இடைவெளி விடப்படும் பகுதிகளில் செம்மண் கொட்டி சமன் செய்ய வேண்டும் என, குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சிமென்ட் சாலைகள் 1 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. பக்கவாட்டு பகுதிகள் தாழ்வாக இருப்பதால், எதிரெதிரே வாகனங்கள் கடக்கும்போது சாலையில் இருந்து கீழே இறங்க முடியாத நிலை ஏற்படுகிறது.இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். வேறுவழியின்றி குடியிருப்புவாசிகள் வீட்டில் இருந்து சாலை வரை சரிவு பாதை அமைத்துக் கொள்கின்றனர்.ஒவ்வொருவரும் சாலையை ஆக்கிரமித்து வருவதால், மற்றவர்களுக்கு பெரும் இடையூறாக அமைகிறது. ஒன்றிய அதிகாரிகள் சிமென்ட் சாலைகள் அமையும் இடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வதில்லை.எனவே, மீஞ்சூர் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட சிமென்ட் சாலை அமைந்த இடங்களில், சாலைகளின் இருபுறமும் செம்மண் கொட்டி சமன் செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை