உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாதாள சாக்கடையில் வெளியேறும் கழிவு நீரால் திருமழிசை பகுதிவாசிகள் தினமும் அவஸ்தை

பாதாள சாக்கடையில் வெளியேறும் கழிவு நீரால் திருமழிசை பகுதிவாசிகள் தினமும் அவஸ்தை

திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீரால் தினமும் பகுதிவாசிகள் அவஸ்தை பட்டு வருவதோடு சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என பகுதிவாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 150க்கும் மேற்பட்ட தெருக்களில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இங்கு ஜெகந்நாத பெருமாள் கோவில், ஒத்தாண்டேஸ்வரர் என பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளதால் கோவில் நகரமாக பெயர் பெற்றுள்ளது. சிறப்பு வாய்ந்து கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.சாட்டிலைட் நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இங்கு பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 40.60 கோடி ரூபாய் செலவில், 2007ல் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தால் துவங்கப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு நிறைவடைந்தது.பணிகள் துவங்கி 12 ஆண்டுகள் கழித்து நிறைவடைந்து ஐந்துஆண்டுகள் ஆகியும் இன்று வரை பாதாள சாக்கடை பல பகுதியில் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. இதற்கு பேரூராட்சியில் அடைப்பு வாகனம் இல்லாததே காரணம் என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.குறிப்பாக பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் கடும் சிரமப்பட்டு வருவதோடு சுகாதாரமும் கேள்விக்குறியாகி உளளது. மேலும் மழை காலங்களில் படும் மரண அவஸ்தைக்கு அளவே கிடையாது என திருமழிசை பகுதிவாசிகள் தெரிவித்தனர்.அதிகரித்தது வரும் குடியிருப்புகள், மக்கள் தொகை ஆகியவற்றிற்கு ஏற்ப திருமழிசையில் கழிவுநீர் முறையாக கையாளப்படாமல், ஆங்காங்கே தேங்கி வருவது பகுதிவாசிகளிடையே கவலையையும், அச்சத்தையும் அதிகரித்து உள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் சாட்டிலைட் நகரமாக தேர்ந்தடுக்கப்பட்ட திருமழிசை பேரூராட்சியில் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு செய்து சீரமைத்து சுகாதாரம் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பேரூராட்சி அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது :அரசிடமிருந்து தமிழ்நாடு மெட்ரோ வாட்டர் மூலம் திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதுார் என இரு பேரூராட்சிக்கு தலா 80 லட்சம் ரூபாய் மதிப்பில் இரு அடைப்பு வாகனம் வாங்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.புதிய அடைப்பு வாகனம் வந்தவுடன் பாதாள சாக்கடை திட்டம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் வெளியேறாமல் செல்லும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.க்ஷதற்போது தனியார் அடைப்பு வாகனம் மூலம் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றும் கழிவுநீரில் பிளாஸ்டிக் கவர் போன்ற குப்பை போடாமல் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே பாதாள சாக்கடை திட்டத்தை முழுமைப்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ