நெற்களமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் திக்... திக்
திருத்தணி,: திருத்தணி - பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர்.இதில், பெரும்பாலான விவசாயிகள் நெல், வேர்க்கடலை மற்றும் மிளகாய் போன்றவை அதிகளவில் பயிரிடுகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்யும் தானியங்களை உலர்த்துவதற்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் இரண்டு நெற்களம் அமைக்கப்பட்டது.இந்த நெற்களம் முறையாக பராமரிக்காததால், தற்போது சேதமடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் தற்போது தானியங்களை மாநில முதன்மை நெடுஞ்சாலையில் கொட்டி உலர வைக்கின்றனர். தற்போது நெல் அறுவடை செய்து வரும் விவசாயிகள், நெற்களம் வசதி இல்லாததால், நெடுஞ்சாலையில் நெல்லை காய வைக்கின்றனர். இந்த சாலை வழியாக, 24 மணி நேரமும் பேருந்து, கார், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையில் நெல் கொட்டுவதை தடுத்து, புதிய நெற்களம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.