| ADDED : ஜூலை 04, 2024 09:46 PM
பழவேற்காடு:பழவேற்காடு லைட்ஹவுஸ் குப்பம் - காட்டுப்பள்ளி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.கடல்சீற்றம் அதிகமாக இருக்கும் காலங்களில், அதிக அலை ஏற்பட்டு, கடற்கரை மணல், சாலையில் வந்து குவிகிறது.கடந்த ஆறு மாதங்களாக காளஞ்சி, கருங்காலி பகுதிகளில் அடிக்கடி சாலையில் மணல் குவிந்து விடுவதால் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கிறது.கடந்த இரு தினங்களாக, இதே நிலை ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் பயணித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், இப்பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார்.அதன்பின் அவர் கூறியதாவது:கடற்கரை மணல் சாலையில் வந்து குவிவதால், போக்குவரத்து பாதிப்பு குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இந்த சாலையை சீரமைக்கவும், தேவையான இடங்களில் பாலங்கள் அமைக்கவும், நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவக்கப்பட்டு, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.மேலும், வாகனங்கள் சென்று வருவதற்கு ஏற்ப, இரண்டு நாட்களுக்குள் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.