| ADDED : ஜூன் 22, 2024 12:11 AM
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு சார் - பதிவாளர் பொறுப்பு வகித்தவரின் காரில் வைத்திருந்த, 11 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், கீழ்நல்லாத்துாரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 47. கடந்த 19ல், பள்ளிப்பட்டு சார் - பதிவாளர் விடுப்பில் சென்றதால், அங்கு பொறுப்பு பணியில் மோகன்ராஜ் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பள்ளிப்பட்டு கோனேட்டம்பேட்டையைச் சேர்ந்த பத்திர எழுத்தர் செல்வராஜ் என்பவரின் காரில் மோகன்ராஜ் பள்ளிப்பட்டு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா மற்றும் போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.இதில், கணக்கில் வராத 11 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. உடன், பள்ளிப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மோகன்ராஜை அழைத்துச் சென்று நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். அப்போது, தான் புதிதாக கார் வாங்க பணம் வைத்திருந்ததாக மோகன்ராஜ், போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அலுவலகத்தில் இருந்த பல்வேறு ஆவணங்களுடன், போலீசார், நேற்று காலை மோகன்ராஜின், கீழ்நல்லாத்துாரில் உள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கும் சில ஆவணங்களைக் கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.