| ADDED : மே 25, 2024 11:13 PM
பொன்னேரி:கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில், 80க்கும் அதிகமான புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை குறித்த நேரத்தில் சென்று வருவதில்லை எனவும், காலதாமத்த்திற்கு உரிய அறிவிப்புகள் இல்லை எனவும் பயணியர் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட்ட புறநகர் ரயில், 4:15 மணிக்கு பொன்னேரி ரயில் நிலையம் வந்தடைந்தது.உடனடியாக புறப்படவேண்டிய ரயில், 4:45 மணி நேரமாகியும் நடைமேடையிலேயே காத்திருந்தது. காலதாமதம் குறித்து எந்த அறிவிப்பு இல்லாததல் அதிருப்தி அடைந்த பயணியர் நிலைய அதிகாரிகளிடம் சென்று கேட்டனர்.அவர்கள் வடமாநில மொழியில் அலட்சியமாக பதில் தெரிவித்தனர். பயணியரின் அதிருப்தியை தொடர்ந்து, 30 நிமிட தாமதத்திற்கு பின், ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் உரிய நேரத்தில் தத்தம் பணிகளுக்கு செல்ல முடியாமல் பயணியர் தவிப்பிற்கு ஆளாகினர்.இது குறித்து பயணியர் கூறியதாவது:ரயில் நிலையங்களில் புறநகர் ரயில்கள் வந்து செல்லும் நடைமேடை, நேரம் குறித்து அறிவிப்பு வருகிறது. நடைமேடைகளில் ரயில்கள் காத்திருக்கும்போது உரிய அறிவிப்புகள் இல்லை. இதனால் ரயில்கள் எப்போது புறப்படும் என தெரியாமல் சிரமத்திற்கு ஆளாகிறோம்.இவ்வாறு கூறினர்.