பொன்னேரி:பொன்னேரி துணை மின்நிலையம் துவங்கி, 69 ஆண்டுகள் ஆன நிலையில், உபகரணங்கள் காலாவதியாகி, தினமும் தொடரும் மின்வெட்டால், ஒரு லட்சம் மின் பயனீட்டாளர்கள் தவித்து வருகின்றனர். இதற்கு விமோசனம் எப்போது என காத்திருக்கின்றனர்.காலாவதியான பொன்னேரி துணை மின் நிலையம்சீரமைக்கும் உபகரணங்களுக்கும் பற்றாக்குறைதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில், 33 கே.வி., துணை மின் நிலையம், 1955ம் ஆண்டு இங்கு நிறுவப்பட்டது. பொன்னேரி நகரம், அனுப்பம்பட்டு, திருவேங்கிடபுரம், பெரும்பேடு, ரெட்டிப்பாளையம், சின்னகாவணம், உப்பளம், எலவம்பேடு என, 100க்கும் அதிகமான கிராமங்களுக்கு மின் வினியோகம் நடைபெறுகிறது.இந்த துணை மின் நிலையத்திற்கு, 11 கி.மீ., தொலைவில் உள்ள மீஞ்சூர் அடுத்த மேலுார் பகுதியில் இருந்தும், 7 கி.மீ., தொலைவில் உள்ள பஞ்செட்டியில் இருந்தும், 33 கிலோ வோல்ட் மின்சாரம் கொண்டு வரப்பட்டு, மின்மாற்றிகள் உதவியுடன் அவற்றை, 11 கிலோ வோல்ட்டாக மாற்றி, குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.இந்த பகுதிகளில் விவசாயம், வணிகம், குடியிருப்பு என, ஒரு லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. நாளுக்குள் நாள் பொன்னேரியை சுற்றியுள்ள பகுதிகளில், புதிய குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. புதிய மின் இணைப்புகளும் அதிகரித்து வருகின்றன.பெருகி வரும் குடியிருப்புகளுக்கு ஏற்ப துணை மின்நிலையம் தரம் உயர்த்தப்படாமல், 69 ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்ட மின் உபகரணங்களை கொண்டே, மின் வினியோகம் தொடர்கிறது.மேலுார், பஞ்செட்டி பகுதிகளில் இருந்து மின்சாரம் கொண்டு வரப்படும் மின் ஒயர்கள் மற்றும் மின்கம்பங்களும் காலாவதியாகி, பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. சிறு மழை பெய்தாலும், மின் ஒயர்கள் அறுந்து விழுகின்றன. கம்பங்கள் உடைகின்றன.துணைமின் நிலையத்தில் உள்ள மின்மாற்றிகள், கன்ட்ரோலர்களும் காலாவதியாகி போன நிலையில், அவ்வப்போது அவையும் பழுதாகின்றன. இதனால், மின்வினியோகம் பாதிக்கிறது. தினமும் மின்வெட்டால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.விவசாயிகள், வியாபாரிகள் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். உணவகங்கள் வைத்திருப்பவர்கள் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.மேலும், ஜெராக்ஸ், இ - சேவை மையங்கள் என, பல்வேறு தொழில் செய்பவர்களும் மின்வெட்டால் வருவாய் இழப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.மின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப துணை மின்நிலையத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மின்வாரியம் அலட்சியம் காட்டுவதாக, பொதுமக்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.கடந்த ஒரு மாதமாக பொன்னேரி துணை மின்நிலையத்தில், தொடர்ந்து அங்குள்ள மின்சார உபகரணங்கள் பழுதாகி வருகின்றன. தினமும், அதை சீரமைப்பதில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களும் இருப்பு இருப்பதில்லை எனவும், அதற்காக பல மணி நேரம் காத்திருப்பதாலும் மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது.இரவு நேரங்களில் தொடரும் மின்வெட்டால், பொதுமக்கள் சாலை மறியல், மின்வாரிய அலுவலகம் முற்றுகை என, போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.எனவே, காலாவதியான துணை மின்நிலையத்தை தரம் உயர்த்துவது, கூடுதல் துணை மின்நிலையம் அமைப்பது போன்றவற்றில் மின்வாரியம் கவனம் செலுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.சரியான திட்டமிடல் இல்லைதுணை மின்நிலையம் அமையும்போது, 10,000த்திற்கும் குறைவான மின் இணைப்புகளே இருந்தன. தற்போது, பன்மடங்கு அதிகரித்து உள்ள நிலையில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படாமல் உள்ளது. துருப்பிடித்து காலாவதியான மின் உபகரணங்களை மின் ஊழியர்கள் எப்படி கையாண்டு, சீரான மின் வினியோகம் வழங்க முடியும். மின்வாரிய அதிகாரிகளை கேட்டால், அதிக மின் பயன்பாடு காரணமாக உபகரணங்கள் பழுதாகின்றன. பொருட்கள் இல்லை என கூறுகின்றனர். சரியான திட்டமிடல் இன்றி துணை மின்நிலையம் செயல்படுகிறது. மின்பாதைகளில் உள்ள மின்ஒயர்கள், கம்பங்கள் புயல், மழைக்காலங்களில் அறுந்தும், உடைந்தும் விழுகின்றன. நவீன தொழில்நுட்ப மின் உபகரணங்களை கொண்டு துணை மின்நிலையத்தை புதுப்பிக்க வேண்டும்.- ஏ.ஸ்ரீதர்பாபுசமூக ஆர்வலர், பொன்னேரி.துணை மின்நிலையம் தரம் உயர்வு அவசியம்பொன்னேரி பகுதி பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்த பகுதியாக மாறி வருகிறது. அதே சமயம், 69 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட துணை மின்நிலையம் மட்டும் மாற்றப்படாமல் உள்ளது. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்வதில்லை. சிறு மழை என்றாலும் மின்வெட்டு பல மணி நேரம் நீடிக்கிறது. தற்போது உள்ள, 33 கிலோ வோல்ட் நிலையத்தை, 110 கிலோ வோல்ட் நிலையமாக மாற்ற வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதற்கான நடவடிக்கைகளில் மின்வாரியம் கவனம் செலுத்தாமல் உள்ளது.- எப்.முகம்மது ஷகில்சமூக ஆர்வலர், பொன்னேரி.