புதருக்குள் மாயமாகி வரும் பங்காரு கால்வாய் செம்பரம்பாக்கம் ஏரி நீர் சேகரிப்பதில் சிக்கல்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் உருவாகும் கூவம் ஆறு, பேரம்பாக்கம், சத்தரை, அகரம், அதிகத்துார், மணவாளநகர், புதுச்சத்திரம், அரண்வாயல், மதுரவாயல், கோயம்பேடு வழியாக, சென்று நேப்பியர் பாலம் அருகே வங்க கடலில் கலக்கிறது.இந்த கூவம் ஆற்றில் ஜமீன் கொரட்டூர் பகுதியில் இருந்த தடுப்பணை, 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்தது. இதையடுத்து, 2021, ஜனவரியில் 29 கோடி ரூபாய் மதிப்பில் 110 மீட்டர் நீளத்தில் தடுப்பணையும், இருபுறமும் தலா 15 மீட்டர் நீளத்தில் கதவணையும் சேர்ந்து 140 மீட்டர் நீளத்தில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இதில், கூவம் ஆற்றில் வரும் நீர் எப்போதும் செல்லும் வகையிலும், அணைக்கட்டு பகுதியில் உள்ள ஷட்டர்கள் திறக்கப்பட்டால், பங்காரு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வெள்ளநீர் செல்லும். இந்த மழைநீர் செல்லும் பங்காரு கால்வாய் தற்போது பராமரிப்பில்லாததால், முட்புதர்கள் சூழ்ந்து, புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால், இவ்வழியே செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த கால்வாயை சுற்றியுள்ள கிராமங்களில் மழைநீர் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த பங்காரு கால்வாய் வெள்ளவேடு உட்பட சில இடங்களில் குப்பை கொட்டும் இடமாகவும் மாறியுள்ளது.எனவே, பங்காரு கால்வாயில் உள்ள முட்புதர்களை அகற்றி, கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'செம்பரம்பாக்கம் ஏரியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அரசுக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பியுள்ளோம். அரசிடமிருந்து உத்தரவு மற்றும் நிதி உதவி வந்தவுடன் செம்பராக்கம் ஏரி மற்றும் ஏரிக்கு நீர் வரும் கால்வாய் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.