| ADDED : ஜூலை 11, 2024 01:05 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் ஜே.என்.சாலை - ஆவடி பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து காக்களூர் வரை, சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வருகிறது. இதில், சாலை நடுவில் மட்டும் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, அப்பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அருகில், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு உள்ளன. இந்த இடத்தில், பாதசாரிகள் நடக்கும் வகையில், சதுர கற்கள் பதிக்கும் பணி சில இடத்தில் முடிவுபெற்றுள்ளது.பல இடங்களில் சாலையோரம் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டும், இப்பணி நடைபெறாமல், அரைகுறையாக உள்ளது.இதனால், சாலையில் அசுர வேகத்தில் வரும் வாகனங்களால், தடுமாறும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரம் ஒதுங்க முடியாமல், ஜல்லிக்கற்கள் மீது விழுந்து, விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.வரும் மழை காலத்திற்குள் மழைநீர் வடிகால்வாய் மற்றும் சாலையோரம் போடப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள் மீது, தார்ச்சாலை அமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.