| ADDED : ஜூன் 22, 2024 12:16 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் தாலுகா அலுவலகம் ஜே.என்.சாலையில் செயல்பட்டு வருகிறது. வளாகத்தில், தாசில்தார், துணை தாசில்தார், வட்ட வழங்கல், சர்வேயர் அலுவலகம் இயங்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக 'ஜமாபந்தி' முகாம் நடந்து வருகிறது. முகாமில், திருவள்ளூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமவாசிகள் மனு அளித்து வருகின்றனர்.தற்போது பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்ட நிலையில், வருவாய், ஜாதி சான்றிதழ் மற்றும் கிராம வாசிகளின் பட்டா மனுக்களும் ஏராளமாக குவிந்து வருகின்றனர். தற்போது, இரண்டு வாரத்திற்கும் மேலாக இணையதள 'சர்வர்' இணைப்பு பழுதடைந்து உள்ளதால், மக்கள் வழங்கும் மனுக்களை உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்ய முடியவில்லை.ஏற்கனவே சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தோர் பல மாதங்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த சூழ்நிலையில், நேற்று மதியம் மின்வெட்டு காரணமாக தாலுகா அலுவலகம் இருளில் மூழ்கியது. இதுகுறித்து, தாசில்தாரிடம் கேட்டபோது, அலட்சியமாக பதில் அளித்து, வேறு பணியில் மூழ்கிவிட்டார்.எனவே, மாவட்ட கலெக்டர் ஒருமுறையாவது திருவள்ளூர் தாலுகா அலுவலகத்திற்கு,'சர்ப்ரைஸ் விசிட்' அடித்து அலுவலக செயல்பாடுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.