உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி கழிவுநீர் ஆய்வு செய்ய தீர்ப்பாயம் உத்தரவு

செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி கழிவுநீர் ஆய்வு செய்ய தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், வீட்டு செப்டிக் டேங்குகளை ஆய்வு செய்யுமாறு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.'செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து பகுதிகளான செம்பரம்பாக்கம், பழஞ்சூர், தண்டலம், மேவளூர்குப்பம், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து உள்ளது. இப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், செம்பரம்பாக்கம் ஏரியின் உள்ளே பல ஆண்டுகளாக கலந்து வருகிறது. 'ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும்' என, திருவள்ளூரை சேர்ந்த சிதம்பரம் என்பவர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கழிவுநீர் கலக்கப்படுவதாக வந்துள்ள புகார் குறித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், வீட்டு செப்டிங் டேங்குகள், கழிவுநீர் உறிஞ்சு குழிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். திருமழிசை பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு தகுந்த இடத்தை, திருவள்ளூர் கலெக்டர் கண்டறிய வேண்டும். குப்பை கொட்டுவதற்கு தகுந்த இடம் இல்லாததால் நெடுஞ்சாலையோரங்களில் குப்பை கொட்டப்படுகிறது. கலெக்டரும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து திடக்கழிவு மேலாண்மை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 31ல் நடக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ