திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், மின்ஒயர்கள் அமைத்து, 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் பராமரிக்காமல், 'ஒட்டு' போடும் பணியில் ஈடுபட்டு வரும் மின்துறையால், சிறு மழைக்கே பல மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, பொன்னேரி மற்றும் திருவள்ளூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்திற்கு உட்பட்ட, மாவட்டத்தில் உள்ள, 526 ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 3,000க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்வசதி செய்து தரப்பட்டுள்ளது. வீடுகள், வணிக நிறுவனங்கள், விவசாய நிலங்கள் என, பரந்து, விரிந்து மின்கம்பம் நடப்பட்டு, மின்ஒயர் வாயிலாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், மின்ஒயர் அமைத்து, 40 ஆண்டுகளாகி விட்டது. அவ்வப்போது மின்ஒயர் துண்டிக்கப்பட்டால், அதை மின்வாரிய ஊழியர்கள் 'ஒட்டு' போட்டு மின்சாரம் வினியோகிக்கின்றனர். இதன் காரணமாக, மின்ஒயர்கள் அனைத்தும் பழமையாகி, சிறு மழை பெய்தாலே மின்ஒயர்கள் அறுந்து விடுகிறது.நேற்று முன்தினம் திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்லும் மின்கம்பங்கள், 5க்கும் மேற்பட்டவை சாய்ந்து விட்டது. அதை சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் இரவு முழுதும் ஈடுபட்டனர். இதன் காரணமாக, ஐ.சி.எம்.ஆர்., சிறுவானுார் கண்டிகை, ஜெ.ஜெ.கார்டன் மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இரவு முழுதும் மின்சாரம் வழங்கப்படவில்லை.அதிகாலை, 3:00 மணிக்கு மேல் தான் மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால், இரவில் கொசுகடியால் பொதுமக்கள் தவித்து, துாங்க முடியாமல் அவதிப்பட்டனர். எனவே, பழமையான மின்ஒயர்களை மாற்றி, புதிய ஒயர் அமைத்து, தொடர்ந்து மின்சாரம் வழங்க பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், அருங்குளம் ஊராட்சியில் இருந்து அடிக்கல்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையோரம், 110 கி.வோ. கொண்ட மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து, 30க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளுக்கும், அடிக்கல்பட்டு பகுதிக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், மின்மாற்றியின் மின்கம்பங்கள் முறையாக பராமரிக்காததால் தற்போது மின்கம்பத்தின் சிமென்ட் தளம் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. அந்த கம்பிகளும், மழையில் நனைந்து துருப்பிடித்து மின்கம்பம் உடைந்து விழும் அபாய நிலை உள்ளது. மின்மாற்றி இடிந்து விழுந்தால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.இதுதவிர, மின்இணைப்பும் துண்டிக்கப்படும் என்பதால் விவசாய மின்மோட்டார்கள், வீடுகளில் மின்விளக்குகள் எரிவதில் சிக்கல் ஏற்படும். மேலும் கிராமத்திற்கும் குடிநீர் பிரச்னை உருவாகும். மின்மாற்றி கம்பங்களை சீரமைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் அப்பகுதிவாசிகள் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்மாற்றியின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.