| ADDED : ஜூன் 11, 2024 05:19 AM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி, திருவள்ளூர் சாலையில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேனிலைப் பள்ளி, தனியார் மெட்ரிக்., மேனிலைப் பள்ளி, மின்வாரிய அலுவலகம், தனியார் திருமண மண்டபங்கள், தனியார் மருத்துவமனைகள் உள்ளன. ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் உள்ள கலெக்டர், எஸ்.பி., வேலை வாய்ப்பு, வேளாண்மை உள்ளிட்ட தலைமை அலுவலகத்திற்கு செல்ல திருவள்ளூர் சாலை வழியே செல்ல வேண்டும்.இந்த சாலையில் தினமும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இங்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் சாலையில் நிறுத்தி விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த நிலையில், திருவள்ளூர் சாலையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கு மாணவ, மாணவியர் செல்கின்றனர். ஏற்கனவே போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால் பாதசாரிகள், மாணவர்கள் நடந்து செல்ல வழியின்றி வாகனங்கள் அருகில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதேபோல், பஜார் பகுதியிலும் பேருந்துகள், கார்கள், லாரிகள் சாலையில் நிறுத்தி விடுவதால் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாக உள்ளது. பாதிப்பு ஏற்படுத்தும் முன் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.