| ADDED : ஜூன் 25, 2024 11:58 PM
திருத்தணி, திருத்தணி தாலுகா, மாம்பாக்கம், லட்சுமாபுரம், பெரியகடம்பூர் மற்றும் குன்னத்துார் ஆகிய நான்கு ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்கள் புதைந்தும், மதகுகள் மற்றும் ஏரிக்கரைகள் பழுதடைந்துள்ளன. இதனால், மேற்கண்ட ஏரிகளுக்கு பருவமழை பெய்யும் போது, ஏரிக்கு நீர் வரத்து இல்லை.இதனால், ஏரியில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தும் விவசாய கிணறுகளிலும் தண்ணீர் இருப்பு இல்லை. மேலும் ஏரிப்பாசனம் நம்பியுள்ள விவசாயிகளும் கடும் சிரமப்பட்டு வந்தனர்.இதையடுத்து மேற்கண்ட நான்கு ஏரிப்பாசன விவசாயிகள், ஏரிகளை சீரமைத்து தர வேண்டும் என, நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் மனு அளித்தனர்.இதையடுத்து திருத்தணி நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கண்ட நான்கு ஏரிகளின் நீர்வரத்து கால்வாய், கடைவாசல் கால்வாய் மற்றும் ஏரிக்கரைகளை பலப்படுத்தவும் தீர்மானித்து அதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்து, நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளது.இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யாததால், ஏரிகள் சீரமைப்பதில் காலதாமதம் ஆகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக மேற்கண்ட ஏரிகளை சீரமைப்பதற்கு முயற்சி எடுக்கப்படும் என, திருத்தணி நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.