| ADDED : ஜூலை 24, 2024 01:40 AM
ஆர்.கே.பேட்டை:சாலையோர நீர்நிலைகளில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்தில் சிக்காமல் தவிர்ப்பதற்காக, நெடுஞ்சாலை துறை சார்பில் நீர்நிலைகளை ஒட்டி, இரும்பு தடுப்பு ஏற்படுத்தப்படுகிறது. சாலையில் இருந்து வாகனஓட்டிகளின் கட்டுப்பாட்டை இழந்து நீர்நிலையில் புகும் வாகனங்கள், சாலையோர இரும்பு தடுப்பில் மோதி, சாலையிலேயே நிற்கும் இதனால், விபத்து சேதம் பெருமளவில் குறையும். இந்நிலையில், ஆர்.கே.பேட்டையில் சோளிங்கர் செல்லும் மாநில நெடுங்சாலையில், ஐந்து நாவல் மரம் பகுதியில், குளம் ஒன்று சாலையோரம் உள்ளது. இந்த குளத்திற்கு மேற்கில் உள்ள ஏரியில் இருந்து நீரூற்று உள்ளதால், ஆண்டு முழுதும் குளம் நிரம்பியே காணப்படும். மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த குளக்கரையை கடந்து தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த குளக்கரையில் சாலையோர இரும்பு தடுப்புகள் பொருத்தப்படவில்லை. இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் மற்றும் பயணியரின் பாதுகாப்பு கருதி, இந்த குளக்கரையில் இரும்பு தடுப்பு அமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.