| ADDED : ஜூலை 31, 2024 03:04 AM
மீஞ்சூர்:மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் குளம் உரிய பராமரிப்பு இன்றி உள்ளது. இக்குளம் முழுதும், ஆகாயத்தாமரை வளர்ந்துள்ளது.மேலும், சுற்றிலும் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் குட்டையாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது.மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளதால், இங்குள்ள குடியிருப்புகளுக்கு, 10 - 12 கி.மீ., தொலைவில் உள்ள சீமாவரம், வன்னிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் ஆழ்துளை கிணறுகள் பதித்து, குடிநீர் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது.அதே சமயம், மீஞ்சூர் பகுதியில் உள்ள நீர்நிலைகள் பராமரிக்கப்படாமல் இருக்கின்றன. நீர்நிலைகளை பராமரிப்பதன் வாயிலாக, மழைக்காலங்களில் மழைநீரை தேக்கி வைத்து, பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியும்.நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாத்து, உவர்ப்புத்தன்மையை குறைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், பேரூராட்சி நிர்வாகம் மீஞ்சூர் பகுதியில் உள்ள நீர்நிலைகளை துார்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேணடும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.