பொன்னேரி: நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் குடிநீர் தேவைக்காக, 68 கோடி ரூபாயில் கட்டமைக்கப்பட்ட காட்டூர் - தத்தமஞ்சி நீர்த்தேக்கத்தில், 0.20 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்போது, கூடுதலாக தேக்கி வைக்க வாய்ப்புள்ளதாக, நீர்வளத் துறையினர் தெரிவித்தனர். பொன்னேரி அடுத்த காட்டூர் மற்றும் தத்தமஞ்சியில் உள்ள ஏரிகளை சிறிய அளவிலான நீர்த்தேக்கமாக மாற்றும் பணிகள், 68 கோடி ரூபாயில், 2020 - 2023ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டன. ஆரணி ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களும் துார்வாரப்பட்டு, 9.3 கி.மீ., சுற்றளவிற்கான கரைகளின் உயரங்களை அதிகப்படுத்தி புதுப்பிக்கப்பட்டன. ஏரிகளின் உள்வாய் பகுதிகளில் இருந்த ஷட்டர்கள் மாற்றப்பட்டு, புதிதாக பொருத்தப்பட்டன. கரைகளை உயர்த்துதல், பலப்படுத்துதல், மதகுகள் அமைத்தல், கலங்கல் பகுதிகளில் ஷட்டர்கள் அமைத்தல் என, பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடந்தன. இதன் மூலம், இரு ஏரிகளிலும், 0.35 டி.எம்.சி., தண்ணீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், மேற்கண்ட ஏரிகளில் திட்டமிட்ட அளவை விட குறைவாகவே தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. நடப்பாண்டு பருவமழையின் போதும், ஆரணி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இரு ஏரிகளிலும், 0.20 டி.எம்.சி.,க்கும் குறைவாக தண்ணீர் உள்ளது. ஆரணி ஆற்றில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறும்போது தான், மேற்கண்ட ஏரிகளுக்கு கூடுதலாக தண்ணீர் கிடைக்கும் என, நீர்வளத்துறையினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது: இரு ஏரிகளுக்கும் ஆரணி ஆற்றில் இருந்து, கால்வாய்கள் வழியாக தண்ணீர் வருகிறது. ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, ஏரிகளுக்கு எளிதாக தண்ணீர் உள்வாங்கும். தற்போது, அதற்கான 'பிரஷர்' குறைவாக உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் போது, எதிர்பார்த்த அளவிற்கு ஏரிகளில் தண்ணீர் தேங்கும். இவ்வாறு அவர் கூறினார்.