100 நாள் பணியாளர்கள் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
மீஞ்சூர்:மீஞ்சூர் ஒன்றியம், கம்மவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மனோபுரம், பெரியமனோபுரம், எல்.எஸ். பூதுார் உள்ளிட்ட கிராமங்களில், 400க்கும் அதிகமான 100 நாள் பணியாளர்கள் உள்ளனர்.இவர்கள் கால்வாய், குளம் வெட்டுவது, சாலை சீரமைப்பு, துாய்மை பணி, மரம் வளர்த்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில், 100 நாள் பணியாளர்களுக்கு சரிவர பணிவழங்கப்படுவதில்லை எனக்கூறி, நேற்று, அவர்கள் மீஞ்சூர் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:இந்த ஆண்டு, ஒவ்வொருவருக்கும், 12 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டு உள்ளது. நுாறுநாள் வேலையை நம்பித்தான் எங்களது வாழ்வாதாரமே உள்ளது. அதிகாரிகளை கேட்டால், செய்வதற்கு எந்த பணியும் இல்லை என கூறுகின்றனர். பல்வேறு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை மீட்டு, அதில் மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம் வளர்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பி.டி.ஓ., குமார் பேச்சு நடத்தினர். உடனடியாக பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.