திருத்தணியில் 11 ஊராட்சி செயலர் இடம் காலி: வளர்ச்சி பணியில் தொய்வு
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், மொத்தம் 27 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஒரு ஊராட்சி செயலர் வீதம், மொத்தம், 27 பேர் பணிபுரிந்து வந்தனர். கிராம ஊராட்சிகளில் வரி வசூல், குடிநீர், சுகாதாரம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊராட்சியில் இருந்து அரசுக்கு தேவையான புள்ளி விபரங்கள் சமர்ப்பித்தல், மாவட்ட நிர்வாகம் வாயிலாக கிராம ஊராட்சிகளில் கொண்டு சேர்த்தல் உட்பட பல பணிகளை ஊராட்சி செயலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி செயலர்கள் வயது, கல்வி, பணிக்காலம் அடிப்படையில், இளநிலை உதவியாளர்களாக பதவி உயர்வு அளித்து மாவட்ட அளவில் உள்ள, 14 ஒன்றிய அலுவலகங்களுக்கு நியமித்தனர்.அதாவது, திருத்தணி ஒன்றியத்தில் இருந்து மொத்தம், 10 ஊராட்சி செயலர்கள் பதவி உயர்வு பெற்று ஒன்றிய அலுவலங்களுக்கு சென்றுவிட்டார். மத்துார் ஊராட்சி செயலர் மட்டும் உடல்நலக்குறைவால் கடந்தாண்டு இறந்து விட்டார்.தற்போது சின்னகடம்பூர், பட்டாபிராமபுரம், மத்தூர், கிருஷ்ணசமுத்திரம், சூரியநகரம், வீரகநல்லூர் தரணிவராகபுரம், பீரகுப்பம், தாடூர், டி.சி.கண்டிகை, வி.கே.என்.கண்டிகை ஆகிய 11 ஊராட்சிகளில் செயலர் பணியிடம் நிரப்பாமல் பல மாதங்களாக காலியாக உள்ளது.இதனால் ஒவ்வொரு ஊராட்சி செயலர்களும், கூடுதலாக ஒரு ஊராட்சியை கவனிக்க வேண்டி உள்ளது. இதனால் ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி மேற்கொள்ள முடியாமல் ஒன்றிய நிர்வாகம் திணறி வருகிறது. எனவே கலெக்டர் பிரதாப் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நடவடிக்கை நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.