| ADDED : ஜன 19, 2024 12:38 AM
சென்னை:சென்னையில் இருந்து மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேஷியன் ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், நேற்று முன்தினம் 12:20 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 148 பயணியர், 12 விமான ஊழியர்கள் உட்பட 160 பேர் இருந்தனர். ஓடுபாதையில் ஓடத் துவங்கிய போது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதனால், உடனடியாக விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்திவிட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் கொடுத்தார்.இதையடுத்து, அந்த விமானம் இழுவை வண்டி மூலம் புறப்பட்ட இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, விமான பயணியர் உட்பட160 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்திற்குள் ஏறி, விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், உடனடியாக விமானத்தின் இயந்திரங்களை சீர் செய்ய முடியவில்லை. பயணியர் அனைவரும், சென்னை விமான நிலையத்தில் இருந்து சொகுசு பஸ்களில் அழைத்து சென்று, பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். கோலாலம்பூர் மலேஷியா செல்லும் அந்த விமான இயந்திர கோளாறை சரிசெய்து, மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.